ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------


போட்டிகளுக்குரிய பொருள் (Subject) மட்டுமே தரப்படுகிறது
(அதற்குப் பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தரவேண்டும்) :

வகை-(1)கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.(கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்)

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 
25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 
24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...

போட்டிக்கான விதிமுறைகள்

(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். வலைபதிவரின் பெயரிலேயே படைப்புகள் வரவேண்டும்.

(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)

(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.

அன்பான வேண்டுகோள் ஐந்து

(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.

(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.

(3) அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!

(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com

(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம்.

44 கருத்துகள்:

  1. போட்டி விதிகள் இங்கு வந்து விட்டனவா...?

    ஐயா தங்களின் தளத்தில் இந்த இணைப்பை பதிவின் மட்டும் சிறிது மாற்றம் செய்து விடவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    நிகழ்ச்சிகள் கூடிக கொண்டே இருக்கின்றனவே
    மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா...நிகழ்ச்சியும் கூடக்கூட மகிழ்ச்சியும் கூடத்தான் செய்கிறது..கூடவே கொஞ்சம் அச்சமும்...எனினும் உங்களைப் போலும் “துணைவலையும் தன்வலையும்“ எண்ணிச் செயல்பட்டு வருவதால்... செய்யலாம் எனும் மனவலிமை வருகிறது அய்யா.

      நீக்கு
  3. வலுவான அமைப்புகள் இணைந்து நடாத்தும் போட்டி!
    கனமான பரிசில் தொகை உடன் சிறப்பான போட்டி!

    "வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது எனின் புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்." என்ற கோட்பாட்டை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

    புதிதாக வலைப்பக்கம் தொடங்கிப் போட்டியில் கலந்துகொள்வோருக்கு எனது முதன்மை வாழ்த்துகள். ஆயினும் அவர்கள் தொடங்கிய வலைப்பக்கத்தைத் தொடர்ந்து பேண நமது பதிவர்கள் மதியுரை தருவார்கள் என உறுதிமொழி தருகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்கய்யா.. நம் -வலைக்- குடும்பத்தைப் பெருக்குவோம்.
      (இதில் கட்டுப்பாடு வேண்டியதில்ல.ல்ல?)

      நீக்கு
  4. தமிழ் வளர்ச்சிக்கு உதவும் ஒரு சந்திப்பாக நிகழ்வது குறித்து மகிழ்வு! அருமைஅருமை! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பர்களே அதுதானே நம் நோக்கம்? (அப்ப சரியாத்தான் சொல்லியிருக்கிறோமா?) நன்றி நன்றி

      நீக்கு
  5. புதிதாக வலைத்தளம் ஆரம்பிக்கவும் ஊக்கப்படுத்தும் செயலாகவும் உள்ளதே அருமை!! வாழ்த்துகள்! அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் கிடக்கும் இளைய தமிழகத்தை, சுய படைப்பாளியாக வலைப்பக்க எழுத்தாளராக்குவோம் தங்கள் தளத்திலும் முகநூல் சுட்டுரைகளிலும் நண்பர்களுக்குப் பகிருங்கள்..நன்றி

      நீக்கு
  6. Mika periya alavil nadakka ullathai unara mudikindrathu....anna

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி. இதில் மாவட்ட விலக்கெல்லாம் கிடையாது. தகுதியான படைப்புக்குப் பரிசு தருவது நடுவர்கள் முடிவுதானே? நடுவர்கள் மிகப் பெரும்பாலோர் வெளியில்தான்...

      நீக்கு
  7. ஆஹா! தினம் ஒரு புதுமையைக் காண்கிறேன். அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான போட்டிகளுடன் விழா இன்னும் கோலாகலமாக விழாவைக் காணும் ஆவலில் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...மின்னல் வேகம் என்ன வேகம்? எங்க
      சசி வேகம்தான் இன்னும் வேகம்! எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் பதிவை எடுத்துப் போட்டுட்டு அதே வேகத்தில் இங்கும் ஒரு பின்னூட்டம்... நன்றி சகோதரி. சரி போட்டிகளுக்குப் பேனா அல்ல “மௌஸ்“ ரெடியா? இதே வேகத்தில் படைப்புகளும் வரட்டும் வாழ்த்துகளுடன் ஸ்பெஷல் நன்றியும் உங்களுக்கே உரியது.

      நீக்கு
  8. வெல்ல பிள்ளையாரை எந்த பக்கம் கிள்ளினாலும் இனிக்கும்
    என்பது போல. வலையுலகில் எங்கு நோக்கினும் புது(மை)கை விழாக்கோலம்
    இத்தனை பேரின் அர்பணிப்பான உழைப்பில் களைகட்டுதே புதுக்கோட்டை
    உடன் திண்டுக்'கல்' எனும் ஆணி வேர் காட்டிடுதே தன் ஈடுபாட்டை

    தொடரட்டும் அசத்தல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்... அதுதான் சரி. இந்தவிழா நம் அனைவரின் -வலைப்பதிவர் குடும்பங்களின்- விழாத்தானே? அதைத்தான் நம் பதிவர்கள் மீண்டும் மீண்டும் செயல்படுத்துகிறார்கள்.. எங்களையும் அப்படிச் செயல்பட உற்சாகம் தருகிறர்ர்கள்..“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே? கூட்டுவித்தால் யாரொருவர் கூடாதாரே?” நன்றி அன்பு

      நீக்கு
  9. மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் நடப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கட்டுரைப் போட்டிகள் பற்றி இன்றுதான் அறிந்தேன். இனி தினமும் இந்தப் பக்கம் வந்து பார்க்கிறேன். பரிசு மழை கொட்டப் போகிறது. புதுக் கோட்டை விழாக் கோலம் காணப்போகிறது என்று நினைக்கும் போது இப்போது மனம் சிலிர்க்கிறது.
    நல்வாழ்த்துகள்!

    என்னைப்பற்றிய விவரங்கள் அனுப்பியிருக்கிறேன் - முதலில் அனுப்பியபோது புகைப்படம் இணைக்க மறந்து விட்டேன். இன்று மறுபடியும் புகைப்படத்துடன் அனுப்பியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. போட்டியில் மட்டுமின்றித் தாங்கள் விழாவிலும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று பாசத்துடன் கேட்டுக்கொள்கிறோம். வணக்கம்

      நீக்கு
  10. தினமும் பதிவர்விழாவுக்கு புதிய புதிய செயல்பாடுகள். வாழ்த்துக்கள் குழுவுக்கு .விழாக்கோலத்தில் இணைய முடியாத தூரத்தில் உடல் ஆனால் உணர்வுகள் புதுக்கோட்டை நோக்கியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுண்டெலியால் தொட்டுவிடும் தூரத்தில்தானே இருக்கிறீர்கள் தோழா தினமும் நீங்கள் இங்கு வந்தால் சந்திக்கலாம்தானே? அப்புறம்?
      போட்டிப்படைப்பும், பதிவர் கையேட்டு விவரமும் அனுப்பிட்டீங்களா? நீங்க அனுப்புவதுடன் நண்பர்களையும் கலந்துகொள்ளச் சொல்லி உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைந்தே இருப்போம் நன்றி

      நீக்கு
  11. பதிவர்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய கவிதை, கட்டுரை போட்டிகளை அறிவித்து பதிவர் விழாவைச் செம்மொழி மாநாடு போல் ஆக்கிவிட்டீர்கள்! தமிழுக்கு நல்ல பல ஆக்கங்கள் கிடைக்க இது போன்ற போட்டிகள் உதவி செய்யும். பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பதிவர் விழாவைச் செம்மொழி மாநாடு போல் ஆக்கிவிட்டீர்கள்!“
      ஆகா...சகோதரீ...இதுல ஒன்னும் வஞ்சப்புகழ்ச்சி ஏதும் இல்லயே? இல்ல...எங்கள வச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலயேன்னு கேட்டேன்... அப்பறம்? போட்டிக் கவிதை கட்டுரை எப்ப வரும்?

      நீக்கு
  12. கல்விதுறையை சார்ந்த பலர் இந்தவிழாவை நடத்துவதால் இந்த விழாவில் மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை வந்த அறிவிப்புகளை பார்த்த போது இந்த விழா வழக்கமான ஒரு பதிவர்விழா போல இருக்கிறது. என்னடா கல்விதுறையை சார்ந்தவர்களின் முழுபங்களிப்பு இல்லையே என்று நினைத்து கொண்டிருந்த போது இன்றைய அறிவிப்பு அதை தகர்த்து வந்துள்ளது.. இந்த முயற்சிக்கு யார்காரணமாக இருந்தாலும் அவர்களை விழாவில் நிச்சயம் கெளரவிக்கவேண்டும்.. அதற்கு காரணமானர் நீங்களாக இருந்தாலும் அல்லது உங்கள் குழுவில் யாராக இருந்தாலும் கெளரவிக்கப்பட வேண்டும்.... இந்த பதிவர் விழா சரியான ஆட்களிடம் தான் போய் சேர்ந்து இருக்கிறது என்பதில் மிக சந்தோசம். மாற்றம் முன்னேற்றம் புதுக்கோட்டை வலைபதிவர் குழுவினர் என்பது உங்கள் குழுவிற்கு மிக பொருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது "மனமார்ந்த" பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா...பெரும்பாலும் கல்வித்துறைதான்...அதற்குக் காரணமும் எங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த அய்யா அருள்முருகன் அவர்கள் என்பதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.. இப்போது தொழில்நுட்பம் அறிந்த இளைஞர்கள் சிலர் இணைந்திருப்பது புதிய பாய்ச்சலுக்குக் காரணமாகிறது.. அதை விட உங்களைப் போலும் நண்பர்களின் உற்சாகமூட்டும் சொற்கள் உதவிகள்..மிகப்பெரிய பலம்..தங்கள் தளத்தில் இந்தப் புதிய போட்டிகள் பற்றி அவசியம் எழுதவேண்டும் நண்பரே!நன்றி.

      நீக்கு
  13. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற அனைவரையும் அழைக்கின்றோம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி எப்போ உங்கள் தளத்தில் இந்தப் போட்டிகள் பற்றி எழுதப்போறீங்க தலைமை ஆசியர்-எழுத்தாளர் நண்பரே! அப்படியே உங்களுக்கும் எங்கள் வாழ்த்தும் வணக்கமும்.

      நீக்கு
  14. விழாக்குழுவினருக்கு வணக்கம்!
    எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் போல பலருக்கு சந்தேகம் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.
    (7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம்///
    இதன்படி ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாமா?
    அல்லது எத்தனை எழுதினாலும் அத்தனையும் பதிவிட வேண்டுமா?
    விழாக்குழுவினர் மன்னிக்க. பணிகளுக்கு நடுவே இடையூறு செய்வதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையும் வகையிலும், எத்தனை படைபபும் எழுதலாம்.
      அத்தனையையும் அவரவர் தளத்தில் பதிவிட வேண்டும்
      பின்னர் அந்த இணைப்பை விழாத்தளத்திற்கு அனுப்ப வேண்டும்.
      போதுமா? இன்னும் சந்தேகம் தீரவில்லையா சகோதரி?
      முதலில் எழுதிப் பதிவிடுங்கள்..எத்தனை வருகிறதோ அத்தனையும் பதிவிட்டு அனுப்புங்கள்..
      பரிசுகள் ஒரு பக்கமிருக்க, மிக அதிகமான படைப்புகளைத் தந்து கலந்து கொண்டவர்களுக்கு ஒரு மினி பாராட்டுவிழா -(Appreciation for more and more participation) விழா அமைப்பாளர்கள் நடுவிலாவது - நடத்திவிடுவோம்.

      நீக்கு
  15. இந்த மாதிரியான போட்டி அறிவிப்புகள் ஒரு புறம் உற்சாக மளித்தாலும் வலைப் பதிவர் விழாவில் இது வரை அதற்கு சம்பந்தப் படாத தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் கை கோர்ப்பது உசிதமா என்று எண்ணத் தோன்றுகிறது. வலைப் பதிவர் விழாவை அவர்கள் பணபலத்தால் கடத்திக்கொண்டு( hijack) போகப் பார்க்கிறார்களோ என்னும் ஐயம் எழுகிறது. விழிப்புடன் இருத்தல் அவசியம் மாற்றுக்கருத்து இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நாங்கள் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில் அரசு அமைப்போடு இணைந்து செயல்பட்ட அறிவியல் இயக்க நட்பு வட்டத்தின் அனுபவங்களைக் கொண்டவர்கள். அரசு உதவி அதில் உள்ள விதிச்சிக்கல்கள் பலவற்றை அறிந்தவர்கள்தான். எனினும் தலைமையில் உள்ளவர்கள் யார் என்பது பொறுத்தே இதன் வெற்றி தோல்வி அமையும். நமது நோக்கமே தஇகவின் நோக்கமும் என்பதால் அவர்களின் உதவி நமக்கு உத்வேகமாகவே அமையும். அஞ்ச வேண்டாம். அவரவர் எல்லையை அறிந்து அணுகும்வரை யாருக்கும் யாராலும் கெடுதல் செய்ய இயலாது. எனினும் தங்கள் கருத்திற்கு நன்றி. நமது உழைப்பே வெல்லும்.

      நீக்கு
    2. G.M Balasubramaniam அவர்களே, உங்கள் கருத்தை மதிக்கும் அதே வேளையில் த.இ.க.வினைப்பற்றியும் அதன் இயக்குநர் பற்றியும் அறிந்தால் இச்சந்தேகம் எழாது. அதற்கு இப்பதிவு உதவலாம்.

      நீக்கு
  16. VALAIPPATHIVU THUVAKKUVATHU EPPADI... UTHAVUNGAL... SHANMUGAM CUDDALORE 9842635226

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இந்தக் கேள்வியை சமர்ப்பணம் செய்கிறோம்... இது எல்லாம் அவர் செயல்!

      நீக்கு
  17. எல்லோரும் எல்லாருடைய பக்கங்களையும் போய்ப் பார்ப்பது கடினம். எனவே போட்டிக்கான கவிதை & கட்டுரைகள் வர வர அவை பற்றிய தகவல்களைத் தந்து அதற்கான இணைப்புத் தந்தால் அந்தந்த பக்கங்களில் போய் வாசிக்க வசதியாக இருக்கும். எத்தனை பங்களிப்புகள் இதுவரை வந்துள்ளன என்று தெரிந்து கொள்ளவும் வசதியேற்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “மின் தமிழ் இலக்கியப் போட்டி“ எனும் லேபிள் பகுதியில் இதைத் தொடர்ந்து இணைப்புடன் பகிர்ந்து வரும் திட்டமுண்டு சகோதரி. அங்குமட்டும் பின்னூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. காரணம் நீங்களே விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

      நீக்கு
  18. It appears to be a great intellectuals get together.I was born in a village and lead absolute rural life.I n my 45th year This great country India's National flag was flying in my vehicle as I was I ndia's mission leader to South pole.For this no one was responsible except me. A man is "Master of his own and captain of his Soul" I would like to distribute evidences to this effect with the permission of the organisers. .

    பதிலளிநீக்கு
  19. அருமை. வாழ்த்துகள் பாடுபடும் அனைவருக்கும், பங்களிக்கும் அனைவருக்கும். :)

    பதிலளிநீக்கு
  20. அருமை... அற்புதம் :) பங்குபெற இருக்கும் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துகள். விரைவில் புதுகையில் சந்திப்போம் :)

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவு சந்திப்புக் குழுவுக்கு வணக்கம் ! ஆர்வத்தோடு புதுமையாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டு செயல்படுவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தமே எனினும் என் வாழ்த்துக்கள் உங்களோடு. அனைத்தும் சிறப்புற என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  22. ஒரு பரிந்துரை முன் வைக்கலாம் விழாக் குழுவினருக்கு....என்று தவறாக இருந்தால் மன்னிக்கவும் குழுவினர்...

    போட்டிக்கான கட்டுரைகள் வெளியிடுவதில் தவறு இல்லை. முதலில் இறுதித் தேதிக்குள் நடுவர்களுக்கு மட்டும் அனுப்பிவிட்டு, இறுதி தேதிக்குப் பிறகு போட்டியாளர்கள் தங்கள் தளத்தில் அந்தக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம்....தவறு என்றால் மன்னிக்கவும்....

    பதிலளிநீக்கு
  23. வந்தும் விட்டேன் .இப்பதிவை காப்பி செய்து என் வலை தளத்தில் இணைத்துள்ளேன்.. இனி தான் போட்டிகள் பற்றி பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  24. http://sakthiinnisai.blogspot.in/இது சக்தியுடையது

    பதிலளிநீக்கு
  25. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம். வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான திருவிழா பற்றிய அறிவிப்புகள் புதுகைக்கேற்றவாறு புதுமையாக அல்லவா தினமும் வெளியிடுகிறீர்..உலகத்தமிழ் வலைப்பதிவர் சங்கமிக்கும் திருவிழா நம்ம தமிழ் வளர்ச்சிக்கான விழா சிறக்க வாழ்த்தும் அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் 638402

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...