ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

“தமிழக அரசியல்" வாரமிருமுறை இதழில் நமது பதிவர்விழாச் செய்தி!

நமது “வலைப்பதிவர் திருவிழா-2015”  பற்றிய செய்தி தமிழின் பிரபல இருவார இதழான “தமிழக அரசியல்“ இதழில் வந்துள்ளது. நமது செய்தியை அறிந்து அதனை வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய இதழ்ஆசிரியர் திரு ஆரா அவர்களுக்கும், இங்குவந்து, விழாக்குழுக் கூட்டம் நடக்கும்போதே விவாதங்களைக் கவனித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு,செய்திகளை, இரண்டுபக்கச் செய்தியாக எழுதியிருக்கும் புதுக்கோட்டைச் செய்தியாளர் திரு கண்ணன் கணினி அவர்களுக்கும் நமது நன்றி. நன்றி.

நண்பர்கள் இதழை வாங்கிப் படித்தும், நண்பர்களிடம் தெரிவித்தும் உதவ வேண்டுகிறோம்
இதழில் வந்துள்ள செய்தியில் சில திருத்தங்கள் –

சென்னை நண்பர்கள் தவறாக நினைப்பதுபோல ஒரு பகுதி வந்துவிட்டது. அதாவது நான், “முதன்முதலாக ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய பதிவர் சந்திப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளும் மாநில அளவில் நடத்திய சென்னை விழாவைப் பற்றியும் நான்  சொல்லியிருந்தேன். (சென்னையில் 2013ஆம் ஆண்டு நடந்த விழாவில் நானும் கலந்துகொண்டிருந்தேனே?) அதன்பிறகு மதுரையில் நடந்த விழாவில் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக சுமார் 25பேர் கலந்துகொண்டோம். அந்தவிழாவில், இந்த ஆண்டு புதுக்கோட்டையில நடத்துவது எனும் மதுரைவிழா முடிவின் அடிப்படையில் நாங்கள் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்” என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் செய்தியில் எப்படியோ சென்னைப் பதிவர் விழாவைப் பற்றிய செயதி விடுபட்டுள்ளது. அது என் தவறல்ல எனினும் படிப்பவர்கள் –குறிப்பாகப் பல்வேறு உதவிகளையும் செய்துவரும் சென்னைப் பதிவர்கள் -தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

n  விழா முடிவானதுமே நமது முன்னோடிப் பதிவர் புலவர்அய்யா இராமாநுசம் அவர்களை நேரில் சந்தித்துப்பேசியது மட்டுமல்ல, மீண்டும் இருமுறை சென்னை நண்பர்களின் உதவியோடுதான் செய்தியை அறிவித்தோம், தஇக இயக்குநர் அவர்களைச் சந்தித்தோம் என்பதை நமது பதிவர் அனைவரும் அறிவார்கள்.

n  இப்போது நீங்கள்பார்த்துக் கொண்டிருக்கும் நமது தளத்தினைப் புதுக்கோட்டை நண்பர்கள்  உருவாக்கியபின், அதைத் தனது உழைப்பில் அழகாக மாற்றியவர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்றால், நேற்றுமுழுவதும் இதற்காக உழைத்து, இன்னும் இப்போதைய வடிவத்தைச் செய்திருப்பவர் சென்னைப் பதிவர் திரு மதுமதி என்பதையும் நாங்கள் நன்றியோடுதான் நினைத்து மகிழ்ந்து பாராட்டி வருகிறோம்.

n  “சென்னையிலுள்ள “தமிழ்இணையக் கல்விக்கழகம்“ இந்த விழாவிற்குப் பிறகுதான் எல்லார்க்கும் தெரியவந்ததாக“வும், அதையும் நான் சொன்னதாகவும் செய்தியில் –தவறாக- வந்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், “அம்மாவை மகன் அறிமுகப்படுத்தினான்” என்பது போலத்தான் இது! தஇக எவ்வளவோ இணையப் பணிகளைச் செய்துவருகிறது. தமிழ்க்கணிமையில் பணியாற்றிவரும் அனைவரும் அந்த நிறுவனத்தின் பணிகளைப் போற்றி வருகிறார்கள். அந்த நிறுவன அருமையை இந்த விழாவின் பிறகுதான் அறிந்துகொள்கிறார்கள் என்பது நகைப்புக்கிடமாகும். நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை, பிறகெங்கே சொல்வது? எனவே அதையும் தவறாக எண்ண வேண்டாம்.

n  பதிவர் விழாவுக்காகத் தொடங்கிய வலைப்பக்கத்தை நண்பர்களின் முக நூல்களில் பகிர்ந்து லட்சக்கணக்கானவர்கள் பார்த்து வருகிறாரகள் என நான் சொன்னதை, விழாத்தளத்தை “10,800பேர் ஃபாலோயர்களாகி“ இருப்பதாக வந்திருப்பதும் அன்பின் பிழையன்றி வேறில்லை.

இந்தச் செய்திப் பிழைகளைத் தொடர்புடைய நண்பர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்து, விழாப் பணிகளில் ஏதும் சுணக்கம் வந்துவிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பெருந்தன்மையாளர்கள் இதனைப் பெரிது படுத்த மாட்டார்கள் என்றாலும், அத்தகைய பெருந்தன்மையாளர்களிடம் நான் எனது வருத்த்ததைத் தெரிவித்து, நானறிந்து நடந்த பிழையல்ல என்றாலும் அதற்காக மன்னிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சில இதழ்களிலும், வானொலிச் சிற்றலையிலும் வரும்போது கூடுதல் கவனமாக இருப்போம். - அன்புடன், நா.மு. (விழா-ஒருங்கிணைப்பாளர்)

விழாப் பணிகளை மேலும் சிறப்பாகத் தொடர்வோம்.
11-10-2015 அன்று புதுக்கோட்டையில் சந்திப்போம்.

4 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி ஐயா, செய்தி இதழ்களில் இப்படி செய்திகள் பிழையாவதும் அவர்கள் வசதிப்படி எழுதுவதும் சகஜமான ஒன்று! வருத்தப்பட வேண்டாம்!

  பதிலளிநீக்கு
 2. கவலை வேண்டாம் ஐயா
  தவறாக எடுத்துக் கொள்ளும் பதிவர்கள் நம்மிடம் இல்லை
  விழா பணிகளைச் சிறப்பாகத் தொடருங்கள்
  புதுகையில் சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 3. மக்களிடம் கொண்டு சென்றதற்கு பத்திரிகைக்கு நன்றி சொல்வோம்...
  பத்திரிகை பிழைச் செய்தி வந்துவிட்டது. அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்...

  பதிலளிநீக்கு
 4. பத்திரிக்கைச் செய்தியில் இவ்வாறு நிகழ்வது இயல்பே. இந்த அனுவத்தை நான் பலமுறை எதிர்கொண்டுள்ளேன். ஒரு முறை நான் கண்டுபிடித்த புத்தர் சிலை பற்றிய விவரத்தைத் தருமபோது அந்த ஊரின் பெயரினைக் குறிப்பிட்டு விவரங்களை அனுப்பியிருந்தேன். ஒரு நாளிதழில் அவ்வூரைப் போல பிறிதொரு மாவட்டத்தில் ஊர் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் என்பதை சிவகங்கை மாவட்டம் என வெளியிட்டிருந்தனர். கேட்டபோது ஊரின் பெயரை உறுதி செய்வதற்காக கூகுளில் தேடியபோது அவ்வாறிருந்தது எனக் கூறினர். என்ன செய்வது? இவையெல்லாம் இயல்பே.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...