வியாழன், 3 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் திருவிழா -இளைஞர்கள் உற்சாகம்! சில வேண்டுகோள்கள்!

இளமை இருக்குமிடத்தில் புதுமையும் இருக்கும், செயல்வேகமும் இருக்கும் என்பதை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கண்டோம். அட! இது என்னப்பத்தி இல்லிங்க..நம்ம இளைய தளபதிகள் பத்தி!



கூட்டம் தொடங்கும் முன்னதாகவே நம்ம 'http://ethilumpudhumai.blogspot.in/
ஸ்ரீமலையப்பனைச் சூழ்ந்து கொண்டு அவர் கொண்டு வந்திருந்த மடிக்கணினியைத் திறந்து வரிசையாக விழாவருகைப் படிவத்தை நிரப்பிக்கொண்டு பலரும் நின்றதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது...


பின்னர், கஸ்தூரி சொன்னதுபோல வலைப்பதிவர் திருவிழாபற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் எப்போதும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே போகும். “மயிர்பிளக்கும்“ விவாதங்கள் நடக்கும்! ஆனால்...
ஆனால் இன்று 02-09-2015 மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரியில் நடந்த 6ஆவது கலந்துரையாடல் கூட்டம் வித்தியாசமானது! இம்முறை விவாதங்கள் குறைவு...முடிவுகள் மிகுதி!
காரணம் இளைஞர்களின் பங்கேற்பு! சுறுசுறுப்பான பணியேற்பு!

வேலைப்பிரிவினைகள்
கடந்த கூட்டத்தில் வைத்த தொடர்ச்சியாக சகோ.மு.கீதா முன்மொழிய, உடனுக்குடனே அந்த முன்மொழிவுகள் சிறு சிறு மாற்றத்துடன் சட்சட்டென்று ஏற்கப்பட, கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்குள்ளேயே கூட்டம் முடிந்துவிட்டது. 

ஆனாலும்...
குழு குழுவாகப் பேசிக்கொண்டிருந்த புதுமை நடந்தது... 
ஓவியர்கள் சுமார் 6,7பேர் வந்திருந்தது மகிழ்ச்சி தந்தது! (அதில் இருவர் நம் வலைப்பதிவர் என்பது சிறப்பு!)

இன்றைய ஆலோசனைக் கூட்டம் பற்றித் 
தொடர்ந்து படிக்க....

நல்ல கவிதைகளை அனுப்புக...
வலைப்பதிவர் திருவிழாவில் முதன்முதலாக நடத்தவிருக்கும் கவிதை ஓவியக் கண்காட்சியில், நல்லநல்ல கவிதைகளைத் திரட்டி ஓவியமாக்க வேண்டும் என்னும் விழாக் குழுவினரின் ஆசையைச் செயற்படுத்தும் விதமாக ஏழு ஓவியர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். (அவ்வளவு பேரும் இளைஞர்கள் அதில் இருவர் நம் வலைப்பதிவர்கள்!) வந்து, கவிதைகளைத் தாருங்கள் நாங்கள் இப்போதே வேலையைத் தொடங்கி விடுகிறோம் என்றார்கள்...! அவர்களைச் சமாதானப் படுத்தி, இதுவரை திரட்டியிருந்த –தங்கை மைதிலி கஸ்தூரிரெங்கனும், கவி.வைகறையும் திரட்டி அனுப்பியிருந்த- சுமார் 20 கவிதைகளுடன் இன்னும் கவிதைகளைச் சேர்த்து விரைவில் தருவதாகக் கெஞ்சி அனுப்பினோம்!  அந்த வேலை அப்படி நடக்கிறது...! பதிவர்களும் நல்ல கவிதைகளை அனுப்பி உதவலாம். அந்தக்குழுவின் முடிவில் நல்ல கவிதைகள் ஓவியமாகும். ஒரு (கார்ட் போர்டு) அட்டையில் இந்தப்பக்கம் கவிதை அந்தப்பக்கம் ஓவியம் என்பதாக கவிதைகள் சிறியதாக இருத்தல் நலம். (ஒருவேளை கவிதை தேர்வாகாவிட்டால் சண்டைக்கு வரக்கூடாது, அது நம் விழாக்குழுவின் “கவிதை ஓவியக்கண்காட்சிக்குழுவின் முடிவு!)

“வலைப்பதிவர் கையேடு-2015” 
முக்கியத்துவம் தந்து விவரம் அனுப்புக...
சுமார் 300முதல் 400 வலைப்பதிவர் வரை விவரங்களைத் திரட்டி, அதை சுமார் 150முதல் 200 பக்கம் வரையிலான புத்தகமாக அச்சிட்டு, தமிழில் வலைப்பக்கம் எழுதிருவரும் அனைவரைப் பற்றியும் அனைவரும் அறியத் தரவேண்டும், அதிலும் விழாவுக்கு வரும் அனைவர்க்கும் சுமார் 150ரூ. மதிப்புள்ள அந்த நூலை இலவசமாகத் தரவேண்டும் என்று சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது... வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பக்கத்தில் உள்ள “வலைப்பதிவர் வருகைப் பதிவுப் படிவம்“ யார் யாரெல்லாம் நிரப்பி அனுப்புகிறார்களோ, அவர்களுடைய விவரங்களைத் தொகுத்து வருகிறோம்... இதற்குத் தேவையான விவரங்களை பதிவர்கள் விரைவில் –வரும் 20-09-2015க்குள்- அனுப்பி உதவ வேண்டுகிறோம்.

வலைப்பதிவர் கையேடு (விளம்பர விவரம்)
1க்கு8 (டெம்மி) அளவு – 500 பிரதிகள்.
முன், பின் அட்டைகள் மட்டும் பலவண்ணம்.
மற்ற பக்கங்கள் ஒரே வண்ணம் -பலவண்ண விளம்பரம் தவிர. தோராயமாக விளம்பரம் 25பக்கம் உட்பட 150-175பக்கம்.  ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் மூன்று வலைப்பதிவர் பற்றிய விவரம் வீதம் சுமார் 375முதல் 400 வலைப்பதிவர் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்.பக்கம் விளம்பரத்தையொட்டி மாறலாம்

விழாவில் கலந்துகொள்வோர்க்கு இலவசமாகவும் மற்றவர்க்கு விற்பனை விலையாக ரூ.150 எனவும் முடிவெடுத்துள்ளோம். எனவே, இந்நூலை இணையத்தில் இப்போது வெளியிட இயலாது.

விளம்பர நிர்ணயம் பற்றி –
கடைசி வெளி அட்டை ரூ.10,000 (பலவண்ணம்) - ஏற்கப்பட்டது.
(இந்தக் கடைசி அட்டையை நம் அமெரிக்கத் தமிழ்வலைப்பதிவர் திரு விசு ஆவேசம் தனது புத்தகத்திற்காகக் கேட்டு முன்பதிவு செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும் வணக்கமும் மற்ற பக்கங்கள் மற்ற நம் பதிவர்கள் வழியே விரைவில் நிரம்பும் என நம்புகிறோம்)

உள் அட்டை முதல்பக்கம் ரூ.8,000 (பலவண்ணம்)
(இந்தப் பக்கத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாக “மூன்றாம் சுழி“ திரு அப்பாதுரை இன்று (05-09-2015) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்)

உள் அட்டை கடைசிப்பக்ம் ரூ.7,000 (பலவண்ணம்)

உள்பக்க விளம்பர விகிதம் –
பலவண்ணம்–ரூ.3,000 
(மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.1000)

ஒரேவண்ணம்–ரூ.1,500 
(மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.500)

(நண்பர்கள் யார்வேண்டுமானாலும் விளம்பரம் பெற்றுத்தரலாம். அதற்கான உழைப்பூதியம் 20விழுக்காடு தரப்படும்)

 இதில் வலைப்பதிவர் விவரங்கள் வெளியிடக் கட்டணமில்லை. அது தவிர வேறு –நூல்கள் முதலான வெளியீடுபற்றி- விளம்பரம் தரலாம்.

திண்டுக்கல் தனபாலன் மற்றும் மதுரை பிரகாஷ் முதலான நம் நண்பர்களின் வலைப்பக்கத் தொழில் நுட்பக் கட்டுரைகள் சேர்க்கலாம் (அவர்தம் அனுமதி கிடைத்தால்) வலைப்பக்கத்தில் ஆர்வமிருந்தும், விழாவுக்கு வராத பலரும் இந்தக் கையேட்டை வாங்கியும் பயன்படுத்துவர், இதில் வலைநுட்ப விளக்கம் சேர்ப்பது, விற்பனைக்கும் கையேட்டுப் பயன்பாட்டுக்கும் நல்லது என்பதால் அதுபற்றி விழா வலைப்பக்க மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புதுக்கோட்டையின் தொன்மை வரலாறு, சிறப்புகள் பற்றிய செய்திகள் படங்கள் சேர்ப்பது, நூல்பக்கம் மற்றும் விளம்பர அளவைப் பொறுத்து அமையும்.
---------------------------------------------------
ஆலோசனைக் கூட்டத்தில், 
பின் வரும் குழுக்கள் அமைக்கப்பட்டன-
(1)    நிதி விளம்பரக் குழு
(2)    கவிதை-கண்காட்சிக் குழு
(3)    உணவுக் குழு
(4)    வலைப்பதிவர் கையேட்டுக் குழு
(5)    பங்கேற்போர் பட்டியல் தயாரிப்புக்குழு
(6)    விழா அன்று வருவோர் பதிவுக்குழு
(7)    நூல்-குறும்பட வெளியீட்டுக் குழு
(8)    மேடை நிர்வாகக் குழு
(9)    தங்குமிடம் வாகன உதவிக் குழு
(10)நேரலை ஒளிபரப்புக் குழு
(11)அழைப்பிதழ் தயாரித்து அனுப்பும் குழு
(12)நினைவுப்பரிசுக் குழு
(13)விருதுகள் கேடயம் தயாரிப்புக் குழு
(14)தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு
இக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெயர்கள் இதே வலைப் பக்கத்தில் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் விரைவில் வெளியிடப்படும். தேவையானோர் அவரவரையும் தொடர்பு கொள்ளலாம்.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் உற்சாகம் பெருகிக் காணப்பட்டது. உங்களை வரவேற்க நாங்க தயாராகி வருகிறோம்... அப்ப நீங்க...?

வலைப்பதிவர் நண்பர்களே!
முதலில் பதிவு பண்ணுங்க..
கூகுள் பதிவுப் படிவத்தையும் 
கூகூ...ரயில் பயணச் சீட்டையும்...

எந்த சந்தேகத்துக்கும் 
இந்த மின்னஞ்சல் வழியில் வரலாம் 
bloggersmeet2015@gmail.com      

இந்த வலைப்பக்கத்தையும் 
அவ்வப்போது பார்வையிடுங்கள். 

(இந்த வலைப் பக்கம் இன்னும் அவ்வளவாக அறிமுகமாகவில்லை என்பதால் அறிமுகமான எங்கள் வலைப் பக்கங்களின் வழியாக வரச்செய்தோம். வேறொன்றுமில்லை தவறாக எண்ண வேண்டாம்..)

-------------------------------------------------- 

22 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை பதிவர்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  2. விழாக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இவ்வளவு இளைஞர்களுக்கு நடுவே நான் எப்படி ஈடு கொடுக்கப் போகிறேன் என்று இப்பொழுதே கவலைப்பட ஆரம்பித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா உங்கள் ஆர்வமும் வேகமும் இளைஞர்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல என்று உங்கள் பதிவுகள் சொல்கின்றன.

      நீக்கு
  3. நம் ஊரில் இளைஞர்களை வயதில் நிர்ணயம் செய்வதில்லை அய்யா! மனவயது மட்டும் தான்:) so, நீங்க இங்க சீனியர் இளைஞர், மகிழ்ச்சியாக வாங்க:)

    பதிலளிநீக்கு
  4. ஆகா
    எதுமாதிரியும் இல்லாத
    புதிமாதிரியான
    அற்புதச் சந்திப்பாக இவ்வலை பதிவர்
    சந்திப்பு நடைபெற இருக்கும் என்பது
    தற்பொழுதே புரிகிறது

    பதிலளிநீக்கு
  5. எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டதற்கேற்ப வருகிற செப் 5 நடக்கவிருக்கும் கணித்தமிழ் விழாவில் த.இ.க.வுடன் சந்திக்கப் போகும் ஒருங்கிணைப்பாளர்களைப் பற்றி அறிந்தால். அதற்குத் தகுந்த அழைப்பை அனுப்ப உதவியாகயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. தனித்தனி குழுவாக செயல்படும் விதம் மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது. விழாக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு, செயல்பாடு. குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு, செயல்பாடு. குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. இந்தப் பக்கத்தை அப்படியே
    பதிவர்களுக்கான பொதுப்பக்கமாக்கி
    தமிழ்மணம் போல் ஒரு திரட்டியாக்கலாம்
    திரட்டி தனிப்பட்டு இல்லாமல் ஒரு அமைப்பின்
    அங்கமாக இருப்பின் சிறப்புதான் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  10. மிக நேர்த்தியான திட்ட அமைப்பு தெரிகிறது. அதன் பின்னணியில் இருக்கும் கடுமையான உழைப்பும் தெரிகிறது. முத்து நிலவன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அடேயப்பா! 14 குழுக்களா? விழா திட்டமிட்டபடி பிரும்மாண்டமாக அமையும் என்பதன் அறிகுறி துல்லியமாகத் தெரிகிறது! சொந்த வீட்டு வைபவம் போல் உற்சாகத்துடன் கடுமையாக உழைக்கும் விழாக்குழுவினர்க்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  12. விழா சிறக்கட்டும் (புது)கோட்டை குலுங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. கடைசி வெளி அட்டை ரூ.10,000 (பலவண்ணம்) முடிவாகி விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தரே, நண்பர் விசு ஆசம் பேசினார். கடைசி அட்டை அவருக்கே! முன் உள்அட்டைக்கும் திரு அப்பாதுரை (மூன்றாம் சுழி) உறுதியளித்திருக்கிறார்.
      மற்றவர்கள் முந்திக்கொண்டால் பின்உள்அட்டை கிடைக்கலாம். இல்லையேல் உள்பக்கங்களில்தான் போடவேண்டியிருக்கும்... நன்றி டிடி.. கலக்குங்க..

      நீக்கு
  14. அருமையான முயற்சி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. அருமையான திட்ட அமைப்பு நண்பர்களே! உங்கள் உழைப்பிற்கு எங்கள் ராயல் சல்யூட்!

    பதிலளிநீக்கு
  16. விழாவிற்கான திட்டமிடல்களும் செயல்பாடுகளும் வியக்க வைக்கிறது... குழு உழைப்பிற்கு என்றும் வெற்றி நிச்சயம்... சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  17. பிரம்மாண்டமான ஏற்பாடு!
    ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்கள்
    நியமித்தது அருமையான திட்டம்!
    நடைமுறையை இலகுவாக்கும்!
    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. விழா பற்றிய சந்தேகங்களை எங்களிடம் கேட்பவா்களுக்கு எப்படி அண்ணா பதில் தருவது அல்லது இந்த தள முகவரியில் இருந்து தாங்களே பதில் தந்துவிடுவது சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. அதி தீவிரமாக ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் நட்புகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . நான் இப்போது தான் என் பெயரை பதிவு செய்துவிட்டு வருகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...