புதன், 7 அக்டோபர், 2015

பதிவர் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழ் தேவைதானா? மதுரைத் தமிழன் கேள்விக்கு எமது பதில்.

இக்கேள்வியை, பதிவர் பலரும் விழாக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்பதால் இந்தப்பதிவு அவசியமாகிறது.

அதுவும் நம் இனிய நண்பர், விழா அறிவிப்பு வந்தது முதலே உண்மையான அக்கறையோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிவரும் மதுரைத் தமிழன் அவர்களும் இதே கேள்வியைக் கேட்டிருப்பதால இந்தக் கேள்வி கூடுதலாக அழுத்தம் பெறுகிறது.

நமது அழுத்தமான பதில்- 
தேவைதான் என்பதே. காரணம் வருமாறு-
தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை சுமாராக 18,000 என்கிறார் இதுதொடர்பாக ஆய்வுகள் பலசெய்திருக்கும் திரு.நீச்சல்காரன் http://www.neechalkaran.com/me

இது உண்மையாக இருக்கலாம். ஆனால், உண்மையில் தொடர்ந்து –மாதம் ஓரிரு பதிவு- எழுதுவோர் எண்ணிக்கை வெறும் ஆயிரத்திற்குள் தான் இருக்கும் என்பது எனது கருத்து. இதற்குத் தமிழ்மணம் திரட்டியில் வரும் பதிவுகளே சான்றாகின்றன.அதன்வரிசை 900க்குள்தானே?

எனில், நமது நோக்கம் பதிவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதும், பதிவுகளின் சமூக நோக்கை உயர்த்துவதும், இலக்கியப் பார்வையை விசாலப்படுத்துவதும்,  பதிவுகளின் பொதுவான தரத்தை உயர்த்துவதும் தானே? 

ஆமெனில், இன்னும் ஏராளமான இளைஞர்களைப் பதிவுலகிற்குள் கொண்டுவர  வேண்டுமல்லவா? அதற்கு நம்மிடம் ஏதாவது திட்டமுள்ளதா?

அப்படிக் கொண்டுவர பதிவர் விழாவுக்கு, பதிவர் அல்லாதாரை அழைப்பதும், பதிவுலகத்தை மற்றவர்க்கு அறிமுகப் படுத்துவதும் அவசியமல்லவா? 

நாமென்ன நினைக்கிறோம்- பதிவர் விழாவுக்குப் பதிவர்கள் தானே வரப்போகிறார்கள்,  அச்சிதழ் எதற்கு? மின்னஞ்சல் வழியிலான அழைப்பிதழ் போதாதா? 

நான் கேட்கிறேன்.- 
பதிவர்கள் உலகம் மட்டும் அறியும்படி பதிவர் விழா நடந்தால் மற்றவர் எப்போது எப்படி பதிவராவது?

அண்மையில் நான் சந்தித்த ஒரு செய்தியாளர் ஒரு செய்தி சொன்னார்-
தமிழக அரசு, அரசு அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரையும் மக்கள் எளிதில் தொடர்புகொள்ள உதவியாக அனைவர்க்கும் தொடர்பு மின்னஞ்சல் தந்திருப்பதைப் பற்றி ஒரு முக்கியமான மாவட்டத் தலைவரைக் கேட்டபோது, “அப்படியா? இதுவரை யாருக்கும் எனக்கு இந்த மெயில் ஐடியைக் கொண்டுவந்து தரலையே? யாருக்கிட்ட கேட்கிறது?என்றாராம்! இது கிண்டல் அல்ல! தமிழக நிலை இதுதான்.

அரசு முயற்சிசெய்தால்கூட, அதைப் புரிந்துகொள்ளாத, அதுபற்றிய அக்கறையில்லாத, மின்னஞ்சல் தொடர்பின் பலம் அறியாத, அதுபற்றிய அறிமுகமும் இல்லாத, பல லட்சம்  படித்தோரைத் தொட்டுத் தொடர நாம் என்னதான் செய்யப் போகிறோம்? இதுபோலும் விழாக்களை அவர்கள் அறியும் போதுதானே அது சாத்தியமாகும்?

ஆக, நமக்கான விழா எனினும் இணைய உலகம் பற்றி அறியாத பலலட்சம் மக்கள் வாழும் நாட்டில், அவர்கள் எல்லாரும் வராவிட்டாலும், அவர்களில் ஒரு பகுதியினராவது இதுபற்றி அறிந்து கொள்ளத்தான், அழைப்பிதழ் அச்சிட்டு அவர்களிடம் தரவேண்டியதுள்ளது.

அப்படியானால், நம் பதிவர்களுக்கு அச்சிட்ட அழைப்பு எதற்காக அனுப்ப வேண்டும்? எனும் கேள்வி நியாயமானதுதான்.

ஓர் அழைப்பிதழ் 10ரூபாய் செலவில் 500 அழைப்பிதழ் அச்சிட்டோம். அதில் நம் பதிவர் சுமார் 50பேருக்குள்தான் அனுப்பியிருக்கிறோம். அவர்கள், நம் மூத்த, சென்னை மதுரை போலும் விழாக்களை நடத்திய முன்னோடிகள், நடுவர்கள், பத்திரிகையாளர், விரும்பிக் கேட்டவர்கள். 

மற்ற 400பேர்? பதிவுலகில் கால்பதிக்காத புதியவர்! இவர்களில் 50பேர் வந்தாலே பெரிது! ஆனாலும் இந்தப் பதிவுலகச் செய்தி அவர்களைப் பொறுத்தவரை அழைப்பாக வந்தால்தான் தெரியும், புரியும்.

அழைப்பிதழ் கொடுக்கப் போகும்போது, இதுபற்றிப் பலரும் வியப்பாக்க் கேட்டபோதுதான் பதிவுலகைப் பற்றி அறிமுகப் படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

கடைசியாக அறிவித்த போட்டி பற்றி - 
“ஏன் இப்படி அவசர கதியாக, ஒரு போட்டி? 
“முடிவுத் தேதியை மாற்ற என்ன அவசியம்?“ 
“விழாக் குழுவில் என்ன குழப்பம்?என்று நமது மூத்த பதிவர் ஒருவரே கேட்டபோதும், இந்த விளக்கத்தைத்தான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்- 
வெளியில் நிற்கும் பலலட்சம் படித்த இளைஞர்களை நமது பதிவுகளை -இலக்கியப் போட்டி எனும் பெயரில்- படிக்க வைக்கவே இந்தக் கடைசிப்போட்டி. இதில் நாங்கள் பெரிய வெற்றி பெற்றுவிடுவோம் என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், இப்படித்தானே முயற்சி செய்யவேண்டும்?

அதுவுமில்லாமல், 
மின்னஞ்சல் மட்டும் இருந்தால் கூடப் போதும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று சொன்னதும், வந்து பார்த்து, படித்து, வியந்து, அடுத்த கட்டமாக அவர்கள் பதிவர்களாக மாற வாய்ப்புக் கிடைக்குமல்லவா? எனும் நப்பாசைதான் காரணம். 

போட்டிக்கு எழுதப்பட்ட படைப்புகளைச் சிலநூறு பேராவது பார்த்துக் கருத்துக் கூறுவதும் பிடித்திருந்தால் தொடர்வதும்தானே படைப்பை எழுதியவருக்கான பெரியபரிசு? பரிசும் கிடைத்தால் அது ஊக்கப்பரிசு! சரியா?

எனவே, இதுவரை பார்த்த விழாக்களில் இந்த விழா வித்தியாசமா இருக்கே! இந்த உலகம் தனி உலகமாக இருக்கே! நாமும் உள்ள நுழைஞ்சு பாக்கலாம் போலயே!?என்று பதிவுலகிற்கு அப்பாலிருக்கும் பலரை அருகில் அழைத்துப் பதிவராக்க முயலும் முயற்சியின் ஒரு கட்டம்தான் இநத அச்சு அழைப்பும், “விமரிசனப் போட்டி“ அறிவிப்பும் என்பதை நமது பதிவர்கள் புரிந்துகொள்வர் என்று நம்புகிறேன்.


தேவையெனில் அவர்களது முகவரி தாருங்கள் நாங்களே அச்சிட்ட அழைப்பை அனுப்புகிறோம். அவர்கள் விழாவுக்கு வந்துவிடுவார்கள் என்று நம்பியல்ல..! நமது விழாவைப் பற்றிய விவரம் தெரிந்து ஒவ்வொருவரும் பத்துப் பேரிடமாவது சொல்வார்களல்லவா?


தமிழுலகிலேயே இதுஒரு “புது-உலகம்“ என்பதைத் தமிழுலகம் இனியாவது அறிந்து கொள்ளட்டும். 

இந்த விழா அதற்கொரு திறவுகோலாக இருக்கட்டும். முடிந்தவரை ஊடக, நட்புவழிச் செய்திகள் பரவட்டும். 
ஒவ்வொருவரும் பத்துப் பேருக்காவது மின்னஞ்சல் அனுப்புங்கள் பதிவுலகம் புதியவர்களால் நிரம்பட்டும். 
அதுதானே நம் நோக்கம்?

அதனால்தான் அச்சு அழைப்பும், விமரிசனப் போட்டியும்! 

8 கருத்துகள்:

 1. நீங்களும் என் மண்டையை போட்டு உருட்ட ஆரம்பிச்சிட்டீங்களா தலைவரே.....


  நான் அவசியமா என்று கேட்டதற்கு காரணம் நடத்துவது நாம் அதில் கலந்து கொள்வதும் நாம் அதனால் தேவையா என்றுதான் அதுவும் செலவை மனதில் கொண்டுதான் ஆனால் நீங்கள் வெளியில் உள்ளவர்களையும் அழைக்கப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அது தெரிந்திருந்தால் அப்படி கேட்டு இருக்கவே வாய்ப்பு இல்லை.

  // நமது தெளிவான பதில்-
  தேவைதான் என்பதே. காரணம் வருமாறு-
  தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை சுமாராக 18,000 என்கிறார் இதுதொடர்பாக ஆய்வுகள் பலசெய்திருக்கும் திரு.நீச்சல்காரன் //

  இதை கருத்தில் கொண்டுதான் எனது இந்த பதிவில் நமக்கு தெரிஞ்ச சர்க்கிலில் உள்ளவர்களை மட்டும் கூப்பிடாமல் நமது சர்க்கிலுக்கு அப்பாற்பட்ட பதிவர்களையும் தேடி கண்டு பிடித்து அழைப்பு அனுப்ப வேண்டு. இல்லையென்றால் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஒட்டிக் கொண்டிருப்போம் என்று சொன்னனேன்.


  அதுமட்டுமல்லாமல் இந்த பதிவில் http://avargal-unmaigal.blogspot.com/2015/09/2015-bloggers-meet.html விழாவிற்கு பதிவர்களுக்கு மட்டுமே இருந்துவிடாமல் பொது பேச்சாளர்களை அழைத்து பேசும் போது பொதுமக்களும் கலந்து கொள்ளும் வண்ணம் செயல்பட வேண்டும் ஆனால் இதனை யோசித்து செய்வதற்கு கால அவகாசம் இந்த விழாவில் இருக்குமா என்று தெரியவில்லை அதனால் அடுத்த விழாவிற்கு திட்டமிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டும் குறிப்பிட்டு இருந்தேன்


  இந்த விழாவை நீங்கள் அறிவித்த போது நான் எதிர்பார்ததது ஒன்றே ஒன்று அதை நீங்கள் சாதித்து காட்டியுள்ளீர்கள்( நீங்களும் உங்கள் குழுவினரும்) என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை


  பாராட்டுக்கள் பாராட்டுக்கள் உங்களை போல சொல்லில் வித்தகனாக கவிஞனாக இருந்தால் உங்கள் அனைவரையும் பாராட்டி ஒரு காவியமே படைத்து இருப்பேன் .

  இந்த விழா பற்றி நினைக்கும் போது அதில் என்னால் கலந்து கொள்ளமுடியவில்லையே எனக்கு மனச்சங்கடம் எற்பட செய்கிறது. என்ன செய்ய தொலை தூரத்தில் வாழும் போது இப்படி பல நிகழ்வுகளை இழக்க வேண்டியதாகவே இருக்கிறது எனது தாயார் சகோதரர் மற்றும் கடந்த வாரத்தில் எனது நண்பரின் மரணத்திற்கு கூட என்னால் வரமுடியவில்லை அப்போது என்ன மன வருத்ததில் நான் இருந்தேனோ அதே வருத்ததில்தான் நான் இருக்கிறேன்..

  நல்லவேளையாக உங்களை தனபாலனை முரளியை பாலகணேஷ் ஆவி மேலும் சிலரை பார்க்க வாய்ப்புகள் கிடைத்ததே என்று நினைத்து பார்க்கும் பொழுது மனதின் ஒரத்தில் சிறு சந்தோஷம் ஏற்படுகிறது

  பதிவுகூட நான் இவ்வளவு பெரிதாக எழுதியது இல்லை என நினைக்கிறேன் அதனால் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறேன்

  விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் உழைப்புக்கும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 2. விழா சிறப்பாக அமையும் என நம்புகின்றேன் ! விழாக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அய்யா... வணக்கம்...

  தெளிவான விளக்கங்கள்... நன்றி...

  பாட்டு பாடி ரொம்ப நாளாச்சி...! இதோ :-

  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
  வலைப்பூவென்றால் போராடும் போர்க்களமே...

  போட்டி படைப்பை வாசிப்போம்...
  வானம் அளவு யோசிப்போம்...
  முயற்சி என்ற ஒன்றை மட்டும்...
  மூச்சைப் போல சுவாசிப்போம்...!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் பதில் தெளிவானது; முழுமனதுடன் ஏற்கத்தக்கது.
  விழாக்குழுவினரின் அயராத உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிட்டும்.
  மனம் நிறைந்த வாழ்த்துகள்,

  பதிலளிநீக்கு
 5. எதைச் சொல்ல எப்படி சொல்ல , அற்புதம் ....

  பதிலளிநீக்கு
 6. அருமை! அருமை!! அருமை!!! கடைசியாக அறிவிக்கப்பட்ட போட்டி மூலம் தமிழ் வலைப்பூக்கள் வெளி உலகினரையும் சென்றடையும் வாய்ப்புக் கூடுதல்! அதற்காக மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. நானும் அவசியமா என நினைத்திருந்தேன்...
  தங்கள் விளக்கங்களால் தெளிவுற்றேன்... நன்றி....

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...